சாலையில் தொழுகையை அனுமதிக்க கோரிய பீம் ஆர்மி தலைவருக்கு காங்கிரஸ் எம்.பி. இம்ரான் கண்டனம்

0
87

உ.பி.யில் மசூதிகளில் இடமின்மை காரணமாக முஸ்லிம்கள் சாலைகளில் தொழுகை நடத்துவது சர்ச்சையானது. இதற்கு ஆதரவாக பீம் ஆர்மி எம்.பி. ராவண் என்கிற சந்திரசேகர் ஆசாத் கூறிய கருத்தைகாங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கண்டித்துள்ளார்.

ராஜஸ்தான் ஹரியாணா, உ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் வெள்ளிக்கிழமைகளில் மசூதிகள் நிரம்பி வழிவதால் முஸ்லிம்கள் சாலைகளில் தொழுகை நடத்தி வந்தனர். கரோனா பரவலுக்கு பிறகு ஹரியாணாவின் குருகிராமில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பிறகு உ.பி. மற்றும் டெல்லியிலும் இந்த பிரச்சினை வெடித்தது. இதையடுத்து சாலைகளில் தொழுகை நடத்த பாஜக ஆளும் ஹரியாணா, உ.பி. அரசுகள் தடை விதித்துள்ளன.

இந்நிலையில், உ.பி.யில் சிலநாட்களாக கன்வார் எனும் காவடி யாத்திரை நடைபெறுகிறது. இதற்காக, முக்கிய மற்றும் பதற்றமான பகுதி சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து உ.பி.யின் சுயேச்சை எம்.பி.யான பீம் ஆர்மியின் நிறுவனர் ராவண் எனும் சந்திரசேகர் ஆசாத்கூறிய கருத்து சர்ச்சையானது.

இதுகுறித்து அவர், ‘‘காவடி யாத்திரைக்காக சில’’ மணி நேரம் சாலைகளை மூடும் அரசுக்கு தொழுகைக்காக 20 நிமிடங்கள் அனுமதிப்பதில் என்ன பிரச்சினை? எனவேமுஸ்லிம்களின் சாலை தொழுகையை அனுமதிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குஉ.பி. காங்கிரஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் சஹரான்பூர் எம்.பி.யுமான இம்ரான் மசூத்கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “சாலைகளில் தொழுகை நடத்துவது இஸ்லாத்தில் ஏற்புடையது அல்ல. இதற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், அதை மீறிதொழுகை நடத்தக் கூடாது. ஏனெனில் எதையும் வலுக்கட்டாயமாக செய்ய இஸ்லாத்தில் அனுமதி இல்லை. எனவே, சாலைகளில் தொழுவதை அல்லா ஏற்க மாட்டார்’’ என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவாக இருந்து காங்கிரஸில் இணைந்தவர் இம்ரான் மசூத். இவரது இந்த கருத்து காங்கிரஸின் கருத்தாக கருதப்படுகிறது. இது, தேர்தல் ஆதாயத்திற்காக இந்து மற்றும் முஸ்லிம்களை ஒரே நேரத்தில் திருப்திபடுத்தும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில், கடந்த 2014 தேர்தலுக்கு பின் முதன்முறையாக உ.பி.யில் எம்.பி.க்களை காங்கிரஸ் பெற்றுள்ளது. இந்த செல்வாக்கை அக்கட்சி தக்க வைக்க விரும்புகிறது. இதனால்தான், காங்கிரஸின் முக்கிய முஸ்லிம் தலைவரான மசூத், சந்திரசேகர் கருத்தை கண்டித்துள்ளார்.