நியாயமான தொகுதி மறுவரையறை கிடைப்பதற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்களுடன் இணைந்து பிரதமரை சந்திக்க உள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும், தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
வரும் 2026-ம் ஆண்டில் நடத்தப்பட உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், தமிழகத்தின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை ஆகியவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மக்கள் நல்வாழ்வு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகம் போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட கூடாது. இதை சுட்டிக்காட்டி, முன்கூட்டியே எச்சரிக்கை மணியடித்து நாட்டிலேயே முதன்முதலாக தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
அடுத்த கட்டமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை கடந்த மார்ச் 5-ம் தேதி கூட்டி, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நமது நியாயமான கோரிக்கைகள், அதுதொடர்பான போராட்டத்தை முன்னெடுத்து செல்லவும், இதில் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி மத்திய அரசுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கூட்டு நடவடிக்கை குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கான முன்னெடுப்பில் மிக தீவிரமாக செயல்பட்டு, அந்த கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம் சென்னையில் கடந்த 22-ம் தேதி நடத்தப்பட்டது. அதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.
அந்த கூட்டத்தில் மேற்கொண்ட விரிவான ஆலோசனைக்கு பிறகு, ‘மக்களவை தொகுதி மறுவரைறை என்பது, மாநிலங்களுடன் கலந்துபேசி, வெளிப்படை தன்மையுடன் நடைபெற வேண்டும். 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி செய்யப்பட்ட தொகுதி வரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்பட கூடாது. அதற்கேற்ப, உரிய அரசியல் சட்ட திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இதுதொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பிரதமரிடம் கடிதம் அளித்து முறையிட வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொகுதி மறுவரையறை குறித்து தமிழகம் முன்னெடுத்து செல்லும் விழிப்புணர்வு, தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக, இந்த முன்னெடுப்புக்கு துணைநின்ற பிரதான எதிர்க்கட்சி அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும், கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சிகளுக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று நமது உரிமைகளை, நம்மைபோல பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க, நியாயமான தொகுதி மறுவரையறை கிடைப்பதற்காக, தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்கள் அனைவரையும் அழைத்து சென்று பிரதமரை சந்திக்க உள்ளோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.