தமிழக அரசின் 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக துறைகள் வாரியாக முதல்வர் விஜய் கடந்த ஜூலை 2-ம் தேதிமுதல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார்.
அதன்படி கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் மரிய வில்சன், சி.விஜயலட்சுமி, ஸ்ரீநாத், செ.கமலி, தலைமைச் செயலர் எம்.சாய்குமார் மற்றும் துறை சார்ந்த செயலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகளில் நடந்து வரும் திட்டப் பணிகளின் செயல்பாடுகளை கேட்டறிந்த முதல்வர் விஜய், மீனவர்கள் மேம்பாட்டில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர ஆவின் மூலம் பால்கொள்முதலை அதிகரிக்கவும், தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஆவினை மேம்படுத்தவும், ஆவினில் உள்ள குறைபாடுகளை துரிதமாக சரிசெய்யவும் அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
மேலும், பால் கொள்முதல் விலையை அதிகரிப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல நெடுஞ்சாலைத் துறை குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடந்தது.
இதில் தேசிய அளவில் தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறுகின்றன. எனவே, சாலை விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் உருவாக்க வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் அதிவிரைவு சாலைகளை அமைக்க விரைவில் திட்டங்களை வடிவமைக்கவும், நகர்ப்புற வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சாலை வசதிகளை ஏற்படுத்த 10 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை தயார் செய்யவும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. துறைகள் வாரியான ஆலோசனைக் கூட்டம் ஜூலை 22-ம் தேதி வரை தொடர்ந்து நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.















