பிஎச்டி பட்டம் பெற்ற முதல் திருநங்கை ஜென்சிக்கு முதல்வர் பாராட்டு

0
555

ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கையான ஜென்சிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டையில் பிறந்த திருநங்கையான ஜென்சி, இளநிலை ஆங்கிலப் படிப்பை திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியர் அரசு கலை கல்லூரியில் படித்துள்ளார்.

அதன்பின் எம்ஏ மற்றும் எம்பில் வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் முடித்து, பிஏ மற்றும் எம்ஏ இரண்டிலும் தங்கப்பதக்கத்துடன் முதல் திருநர் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் முடித்துள்ளார்.

இதையடுத்து லயோலா கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உதவி பேராசிரியராக திருநங்கை ஜென்சி பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய அளவில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘வாழ்த்துகள் டாக்டர் ஜென்சி. உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக் கரை சேரட்டும். தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும் ’’என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜென்சி கூறும்போது, ‘‘முதல்வர் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது ஆங்கிலத் துறை தலைவர் மேரி வித்யா பொற்செல்வியின் வழிகாட்டுதலில் தான் இதை முடித்தேன். அவர் இல்லை என்றால் நான் இந்த உயரத்துக்கு வந்திருக்க முடியாது.

கல்வி மட்டும்தான் மனித வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழ் புதல்வன் திட்டத்தில் திருநங்கைகளை தமிழக அரசு சேர்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு அரசுக் கல்லூரியில் ஒரு நிரந்தர வேலையை கருணை அடிப்படையில் வழங்க வேண்டும். மற்ற திருநங்கைகளுக்கும் படித்தால் அரசு துணை நிற்கும் என்ற நம்பிக்கையை இது உருவாக்கும்’’என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here