அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. இந்தநிதியைப் பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத்திட்டங்கள், விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்றியாக வேண்டும்.
இதற்கிடையே தேசிய கல்விக் கொள்கையில் பிஎம்ஸ்ரீ பள்ளி எனும் திட்டம் உள்ளது. இதன்மூலம் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இத்திட்டத்தில் டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழகம்,கேரளா மாநிலங்கள் இணையவில்லை. ஆனால், தமிழகம் மட்டும்பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.அதேநேரம், பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வருகிறது. அதன்படி, கடந்தாண்டுக்கான 3, 4-வது தவணை நிதியுதவி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நடப்பு கல்வியாண்டும் (2024-25) ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, “பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தை மத்திய அரசு 2022-ம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் பள்ளிகளில் நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள், பசுமை வளாகம், சிறந்த ஆய்வகங்கள் என அனைத்துவித கட்டமைப்பு வசதிகளும் இடம்பெறும். இதில் அனைத்து மாநிலங்களும் இணைய வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேருவதற்குவிருப்பம் தெரிவித்து சில கோரிக் கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கான நிதியுதவியை மீண்டும் மத்திய அரசு நிறுத்திவிட்டது. இதனால் தமிழக அரசுக்கும் கூடுதல் நிதி சிக்கல் ஏற்படும். அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது” என்றனர்.