மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சிபிஐ நேற்றுமுன்தினம் கைது செய்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
அர்விந்த் கேஜ்ரிவாலை திட்டமிட்டே சிபிஐ கைது செய்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், “வழக்கு ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கையில் சிபிஐயின் கைதை சட்டவிரோதம் என்று கூற முடியாது” என்று தெரிவித்த சிறப்பு நீதிமன்றம், கேஜ்ரிவாலை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐவுக்கு அனுமதி வழங்கியது.
கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் எக்ஸ் பக்கத்தில் “அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஜூன்20-ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், உடனடியாக நீதிமன்றத்தை அணுகிய அமலாக்கத் துறை, அந்த ஜாமீனுக்கு தடைபெற்றது. அதற்கு மறுநாளே, சிபிஐ அவரை கைது செய்கிறது. ஒட்டுமொத்த மத்திய விசாரணை அமைப்புகளும் கேஜ்ரிவாலை வெளியே வரவிடாமல் சிறைக்குள்ளேயே முடக்க முயல்கின்றன. இது சட்டவிரோதம். இது சர்வாதிகாரம்” என்று பதிவிட்டார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. இதைத் தொடர்ந்து அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்தார்.இதன் அடிப்படையில் கடந்த 20-ம் தேதி டெல்லி விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் கேஜ்ரிவாலின் ஜாமீனுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.