சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: சட்டப்பேரவையில் பாஜக, பாமக வலியுறுத்தல்

0
59

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தின் மீது பேரவையில் உறுப்பினர்கள் பங்கேற்று விவாதித்தனர்.

நயினார் நாகேந்திரன் (பாஜக): சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு எந்த தடையும் இல்லை. கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமே சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகளே மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். எனவே, மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் சமூக நீதி நிலைநாட்டப்படும். ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு நிலையில் வைக்கப்படுகிறது. இதை கருத்தில் கொள்ளவேண்டும்.

தி.வேல்முருகன் (தவாக): பிற மாநிலங்களில் தமிழர்கள் 0.01சதவீதம் அளவுக்கே வேலைவாய்ப்புகளை பெற முடிகிறது. 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை, சரியான தரவுகளை அரசு அளிக்கவேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு அனைத்து எம்.பி.க்களும் அழுத்தம் தரவேண்டும்.

அருள் (பாமக): சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும். இதற்கு சட்டத்தில் முழு உரிமையும் மாநில அரசுக்கு தரப்பட்டுள்ளது.

இதேபோல் சின்னப்பா (மதிமுக), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), வி.பி.நாகைமாலி (மார்க்சிஸ்ட்), சிந்தனைச்செல்வன் (விசிக), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக) ஆகியோர் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பின்னர் சட்ட அமைச்சர் ரகுபதி: மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் மேற்கொள்ள வேண்டும். மாநில அரசு மேற்கொள்ளும் பட்சத்தில், நீதிமன்றம் பின்னாளில் அதை தடைசெய்ய வாய்ப்புள்ளது. நாம் கணக்கெடுப்பு நடத்தி அதன்பேரில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் பின்னாளில் அதை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அருள் (பாமக): மாநில சுயாட்சியை பற்றி பேசுகிறோம். அப்படியிருக்கும்போது, மாநில அரசே நடத்த வேண்டும்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): முதல்வரின் இந்த தீர்மானப்படி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் மத்திய அரசை வலியுறுத்துவார்கள்.

மனோஜ் பாண்டியன் (ஓபிஎஸ் பிரிவு): தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டப்பாதுகாப்பு பெற்றுத் தந்தவர்மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதா.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

பின்னர் பாமக உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், அருள், சதாசிவம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் எந்த தீர்மானத்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது இல்லை. அதைப் போலவேஇதற்கும் அனுமதி வழங்கப்படாது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க காலம் தாழ்த்தவே மத்திய அரசுக்கு இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.