பூதப்பாண்டி அருகே, பெண்ணின் வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாசமாகப் படம் எடுத்ததுடன், சொத்துகளைக் கேட்டு மிரட்டியதாக முன்னாள் காவலர் மற்றும் வழக்கறிஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலம் பகுதியை சேர்ந்த 42 வயது பெண், தனது கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வருகிறார். இவரது குடும்பப்பிரச்சினையை அறிந்த திட்டுவிளையை சேர்ந்த சைலஸ் மற்றும் ரெஜினால்டு ஆகியோர் உதவுவதுபோல் பழகியதாகக் கூறப்படுகிறது.
மகன் பெயரில் சொத்துகளை மாற்றித் தருவதாகக் கூறி வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றதுடன், பெண்ணின் சொகுசு காரையும் வாங்கியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி ஆபாசமாகப் படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பியதாகவும் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
ரூபாய் 50 லட்சம் மற்றும் 40 பவுன் நகைகளைப் பெற்ற பின்னரும், மேலும் ஒரு கோடி ரூபாய் அல்லது நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை எழுதிக் கொடுக்குமாறு மிரட்டியதாக அந்தப் பெண் தமிழ்நாடு டிஜிபிக்கு புகார் அளித்தார். டிஜிபி அலுவலக உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய பூதப்பாண்டி போலீசார், முன்னாள் காவலர் சைலஸ் மற்றும் வழக்கறிஞர் ரெஜினால்டு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
