அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 16 முதல் ஜூலை 31 வரை கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக துணை மேலாளர், அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை பண்டிகை மற்றும் விசேஷ நாட்களாக இருந்ததால், இந்த கோடைகால விடுமுறை நாட்களில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், நடைமுறையில் உள்ள முழு கட்டணமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஜூன் 16 முதல் ஜூலை 31 வரை பயணிகள் வருகை அதிகரித்து, போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மேலாண் இயக்குநரின் உத்தரவுப்படி, ஜூன் 16 முதல் ஜூலை 31-ம் தேதி வரை குளிர்சாதன (ஏசி) வசதியுள்ள, வசதி இல்லாத, இருக்கை, படுக்கை கொண்ட பேருந்துகளுக்கு வார இறுதி நாட்கள் கட்டணத்தையே அனைத்து நாட்களிலும் முழு கட்டணமாக நிர்ணயம் செய்து வசூலிக்க அறிவுறுத்தப்படுகிறது. எனவே, அனைத்து கிளை மேலாளர், உதவி மேலாளர் ஆகியோர் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தி நடத்துநர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும் தேர்வுநிலை முதுநிலை உதவி பொறியாளர் மேற்கண்ட நாட்களில் முன்பதிவிலும் இதே நடைமுறையை செயல்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10 சதவீத கட்டண சலுகை: அரசு விரைவு பேருந்துகளில் வார நாட்களில் 10 சதவீத அளவில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்கள், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் தள்ளுபடியின்றி முழு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இது கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.