பிரேசில் அதிபர் தேர்தல்: ஃப்ளாவியோ போல்சனாரோவை வீழ்த்தினார் லூலா டா சில்வா

0
13

பிரேசில் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் இனாசியோ லூலா டா சில்வா வெற்றி பெற்றுள்ளார். இதன் முதல்கட்ட தேர்தலில் வலதுசாரி வேட்பாளரான ஃப்ளாவியோ போல்சனாரோ முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலில் அதிபர் லூலா வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் அமெரிக்கா தனது செல்வாக்கை செலுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தது. அதற்கு மெட்டா, எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் காரணம் என்று சொல்லப்பட்டது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை விமர்சித்து வந்தார் அதிபர் லூலா. இந்நிலையில், இந்த தேர்தல் நடைபெற்றது.

இதில் முன்னாள் அதிபரின் மகனும், வலதுசாரி வேட்பாளருமான ஃப்ளாவியோ போல்சனாரோ போட்டியிட்டார். அவருக்கு ட்ரம்ப் ஆதரவும் இருந்தது. இந்த சூழலில் கடந்த 4-ம் தேதி பிரேசில் முதற்கட்ட அதிபர் தேர்தலின் முடிவின்படி ஃப்ளாவியோ போல்சனாரோ 47.03% வாக்குகள் பெற்றார். அதிபர் லூலா டா சில்வா 45.16% வாக்குகள் பெற்றார்.

எந்த வேட்பாளரும் 50% பெரும்பான்மை பெறாத நிலையில், இருவருக்கும் இடையே நேற்று (அக். 25) இறுதி மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் பெறுபவரே பிரேசிலின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால் சர்வதேச நாடுகளை சேர்ந்த அரசியல் ஆர்வலர்கள் இதனை ஆர்வத்துடன் கவனித்தனர்.

திருப்புமுனை வெற்றி

கால்பந்து விளையாட்டுக்கு பெயர் போன பிரேசில் நாட்டின் ‘2026 அதிபர் தேர்தலில்’ திருப்புமுனையாக அமைந்தது லூலாவின் வெற்றி. 80 வயதான அவர், இறுதிக் கட்ட தேர்தலில் 51.79% வாக்குகள் பெற்று 4-வது முறையாக அதிபர் தேர்தல் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர் முகாமில் போட்டியிட்ட ஃப்ளாவியோ போல்சனாரோ 48.25% வாக்குகளை மட்டுமே பெற்றார்.

கடந்த நான்கு தசாப்தங்களாக பிரேசிலின் ஆட்சி அதிகார மையத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் லூலா. இந்த சூழலில் முதல்கட்ட தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்த காரணத்தால் இறுதி கட்ட தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் இடதுசாரிகள் ஈடுபட்டன. ‘போல்சனாரோ ஏன் வேண்டாம்?’ என்று பரப்புரையை கையில் எடுத்தனர். டிஜிட்டல் வழி பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டினர் லூலாவின் ஆதரவாளர்கள். அது அவருக்கு தேர்தலில் கைமேல் பலன் கொடுத்துள்ளது.

இந்த தேர்தலில் வாக்குப்பதிவு நேரத்தை அந்நாட்டு நடுவர் நீதிமன்றம் இரண்டு மணி நேரம் நீடித்திருந்தது. அதற்கான கோரிக்கையை அதிபர் லூலா விடுத்திருந்தார். போக்குவரத்து சிக்கல் மற்றும் வானிலை சூழல் அதற்கான காரணமாக கூறப்பட்டது.

ஃப்ளாவியோ போல்சனாரோவும் நாட்டில் சில இடங்களில் வாக்குப்பதிவை நீட்டிக்க வேண்டும் என கோரியிருந்தார். இருப்பினும் நாடும் முழுவதும் இரண்டு மணி நேரம் வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று ஃப்ளாவியோ போல்சனாரோ கூறியுள்ளார்.

2002, 2006, 2022, 2026 அதிபர் தேர்தலில் லூலா வெற்றி பெற்றுள்ளார். 1989, 1994, 1998 அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.

மக்கள் அதிபர்

லூலாவின் ஆட்சி சமூக ஜனநாயக ஆட்சியாக இருந்தது. பிரேசிலின் பொருளாதாரம் மந்தமாக இருந்த சமயத்தில், ஏற்றுமதிப் பொருட்களின் விலை அதிகரித்தது பொருளாதாரத்துக்குப் பலனளித்தது. பொது நிதியில் கணிசமான தொகையை, வறுமையை எதிர்கொள்வதிலும், கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பதிலும் பயன்படுத்தினார் லூலா. இந்தத் திட்டங்களால் சமூகரீதியில் சிறுபான்மையாக இருந்த மக்கள் பலனடைந்தனர். பிரேசிலின் முக்கியப் பிரச்சினையான பட்டினி ஒழிக்கப்பட்டது. நம்பிக்கையளிக்கும் விதத்தில் சில மத்திய பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டன.

2007-08 கடன் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், பிரேசிலின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழல் அந்நாட்டின் பணக்காரர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. லூலாவுக்குப் பின்னர் அதிபரான தில்மா ரூசெஃப் (2011-2016), அந்த நெருக்கடியின் பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தது. பணக்காரர்கள், தொழிலதிபர்களின் பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளில் தில்மா இறங்கியபோது, தொழிலாளர் கட்சியில் அவருக்கு ஆதரவு குறையத் தொடங்கியது. 2018 வரை நீடிக்க வேண்டிய அவரது ஆட்சி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்குவந்தது.

2018 வரை காத்திருந்தால், தாங்கள் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுவிடுவோம் என்று அஞ்சிய மேல்தட்டு வர்க்கத்தினர், தில்மா தலைமையிலான சமூக ஜனநாயக அரசை வீழ்த்த வேண்டும் என்று முடிவுசெய்தனர். வீதிகளில் இறங்கிப் போராடிய அவர்கள், ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கோரினர். தில்மா பதவியிலிருந்து அகற்றப்பட்டு, மிச்சேல் தெமர் அதிபராக்கப்பட்டார்.

2018 அதிபர் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக லூலா போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக 12 ஆண்டுகால தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 580 நாட்கள் சிறையில் இருந்த அவர், 2019-ல் விடுதலையானார். அதன் பின்னர் 2022 அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது பிரேசில் நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினம் அவரது தலைமையிலான ஆட்சி எதிர்கொண்டுள்ள முக்கிய மக்கள் வாழ்வாதார பிரச்சினையாக உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here