கடன் வாங்கியவர்களை மிரட்டுதல், திட்டுதல், சமூக வலைதளங்களில் தொல்லை தருதல் போன்ற செயல்களில் வங்கி ஏஜெண்டுகள் ஈடுபடக் கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
இது கடன் வாங்கியவர்களுக்கு பெரிய அளவில் நிம்மதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று தவணையை செலுத்தத் தவறும் வாடிக்கையாளர்களை, வசூல் முகவர்கள் அச்சுறுத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடன் நிலுவையை வசூலிப்பது வங்கியின் உரிமையாக இருந்தாலும், அது வாடிக்கையாளரின் தனிப்பட்ட சுதந்திரம், கண்ணியம் மற்றும் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் அமையக் கூடாது என ரிசர்வ் வங்கி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் வசூல் முகவர்களுக்கான இந்த ஒருங்கிணைந்த புதிய வழிகாட்டுதல் விதிமுறைகள் 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளன.
கடன் வாங்கியவர்களை, வசூல் செய்யும் வங்கி ஏஜெண்டுகள், மிரட்டுதல், திட்டுதல், சமூக வலைதளங்களில் தொல்லை தருதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி, வங்கி வசூல் முகவர்கள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளவோ அல்லது நேரில் சென்று சந்திக்கவோ முடியும்.
மேலும், தெரியாத அல்லது புதிய செல்போன் எண்களில் இருந்து அழைப்பது, அச்சுறுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது, வாடிக்கையாளர்களை திட்டுவது, மிரட்டுவது, சமூக வலைதளங்களில் வாடிக்கையாளரின் விவரங்களைப் பதிவிட்டு தொல்லை தருவது மற்றும் உறவினர்கள், நண்பர்களைத் தொடர்புகொண்டு தொந்தரவு செய்வது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
வசூல் முகவர்கள் தங்களது அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.















