நாடு சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை, 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் பாஜக அரசு சாதித்து காட்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
தெலங்கானா மாநிலம், சங்காரெட்டியில் பாஜக சார்பில் ‘விஜய சங்கல்ப சபை’ எனும் பெயரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: காங்கிரஸார் செய்த ஊழல்கள், முறைகேடுகளை நான் பகிரங்கமாக கூறுவதால் அக்கட்சியினர் என் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இதனை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று எனக்கு தெரியும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குடும்ப அரசியல் மேலோங்கியது. இதில், அந்த குடும்பங்கள் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால் மக்களின் வாழ்வாதாரம் அப்படியே உள்ளது.
மக்கள் பணத்தை கொள்ளையடிக்க இவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதா? வாரிசு அரசியலை நான் எதிர்க்கிறேன். இதனால் இளைய தலைமுறையினர் அரசியலில் முன்னுக்கு வர முடியவில்லை. உங்கள் நம்பிக்கையையும், ஆசீர்வாதத்தையும் நான் வீணாக்க மாட்டேன். இதுவே மோடியின் வாக்குறுதி. வாரிசு அரசியல் செய்பவர்களுக்கு உள்ளுக்குள் பயம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் ஊழலை வெளிச்சம் போட்டு காண்பிப்பேன். இங்கு கொள்ளை அடிக்கும் பணத்தை மறைக்கவே வெளிநாடுகளில் வங்கிக் கணக்குகள் வைத்துள்ளனர்.
நாங்கள் அனைவரும் மோடியின் குடும்பம் என்று தெலங்கானா மக்கள் உறுதி கூறுகின்றனர். இம்மாநில மக்களின் நம்பிக்கையை நான் இழக்க மாட்டேன். கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை, வெறும் 10 ஆண்டுகளில் பாஜக அரசு அனைத்து துறைகளிலும் சாதித்து காட்டியுள்ளது. இங்கு காங்கிரஸ், பிஆர்எஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒன்றுதான். இவ்விரு கட்சிகள் இடையே ரகசிய உடன்பாடு உள்ளது. பாஜக மீது தெலங்கானா மக்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. நான் கொடுத்த வாக்கை என்றும் மறக்க மாட்டேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.
11 அம்ச கோரிக்கை: முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 11 அம்ச கோரிக்கைகள் கொண்ட மனுவை அளித்தார். அப்போது எனது தெலங்கானா மக்களுக்காக அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என பிரதமர் மோடி உறுதி அளித்தார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அப்போது உடனிருந்தார்.