அருமனையை அடுத்த செம்மங்காலை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று (7-ம் தேதி) சென்றிருந்தார்.
அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த நான்கு கிராம் தங்க நகைகளை திருடி சென்றனர். இதைத்தொடர்ந்து அருகில் லதா என்பவரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவையும் உடைத்து விலை உயர்ந்த பட்டு சாரிகளை திருடி சென்றுள்ளனர்.
சுரேந்திரன் மற்றும் லதா ஆகியோரின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. இரவில் வீடு வந்த சுரேந்திரன் மற்றும் லதா அருமனை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் சென்று கைரேகைகளை பதிவு செய்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.