‘எந்த நெருக்கடிக்கும் ஆளாகாமல் தகுதியான, நேர்மையான, ஊழல் கறைபடியாதவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறி்ப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 பல்கலைக்கழக சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் இசைவு தெரிவிக்க வகை செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திய உயர்கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல். இத் தீர்ப்பின்படி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அரசே நியமிக்கலாம். அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தால், பதவி நீக்கமும் செய்யலாம். இப்போதும் ஆளுநரே வேந்தராக நீடிக்கிறார். ஆனால், துணைவேந்தர் நியமனத்தில் எந்த உரிமையும் இல்லை என்ற விநோதமான நிலை உருவாகியிருக்கிறது.
பல்கலைக்கழக துணைவேந்தரை, வேந்தராக இருக்கும் ஆளுநரே நியமிக்கும் நடைமுறை நாடு முழுவதும் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. இந்த நடைமுறை அரசியல் குறுக்கீடுகளால் நேரும் ஆபத்தைத் தடுப்பதற்காக அமைந்தது. இந்நிலையில், காலம்காலமாக ஆய்வு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட முறையை திடீரென்று மாற்றவேண்டிய அவசரம் என்ன? இதனால், பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஏற்படும். இது, மாநிலத்தின் உயர்கல்வியில் அனைத்து அம்சங்களையும் முழுமையாகச் சிதைத்துவிடும். இந்த விளைவுகளையெல்லாம் உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லையோ என நினைக்க வேண்டியிருக்கிறது.
துணைவேந்தர்களை யார் நியமிக்கிறார்கள் என்பது முக்கியமானது அல்ல. அவர் நேர்மையானவராக, அனுபவம், தகுதியானவராக இருந்தால், அவரைத் துணைவேந்தராக நியமிப்பது ஏற்புடையதாகும். அரசியல் குறுக்கீடு இல்லாமல் இருக்க வேண்டும். துணைவேந்தர் நியமனங்களில் கடந்த காலங்களில் இருந்தது போல் ஊழல், உற்றார், உறவினருக்கு ஆதாயம் செய்தல், சலுகை காட்டுதல் ஆகியவை அமைந்துவிட்டால், தமிழகத்தின் பல்கலைக்கழகங்களின் சுதந்திரம், நேர்மை ஆகியவை பெருமளவுக்கு சிதைந்துவிடும். இது, உயர்கல்வியின் தரத்தையும் ஆராய்ச்சியின் தரத்தையும் சீர்குலைக்கும்.
பல்கலைக்கழக நியமனங்களில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துவது, ஊழல் ஆகியவை 2006-ம் ஆண்டில் தொடங்கின. பன்வாரிலால் புரோஹித் ஆளுநராகப் பொறுப்பு ஏற்கும் வரை (2017 வரை) இந்நிலை நீடித்தது. அப்போது அரசியல் தலைவர்களின் உறவினர்கள், ஆளும் கட்சிகளின் தீவிர விசுவாசிகள், வாக்கு வங்கி அரசியலுக்காக பிரதான சாதிகளைச் சேர்ந்தவர்கள், அதிக பணம் கொடுப்பவர்கள் என்ற நான்கு வகையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர்.
சில நிகழ்வுகளில், விரிவுரையாளர்களாகவும், துணைப் பேராசிரியர்களாகவும் இருந்தாலும் அரசியல் தலைவர்களின் நெருங்கிய உறவினர்கள் என்பதால் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரின் நேர்முக உதவியாளர், துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் கூட துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்ட விநோதமும் நடந்திருக்கிறது.
இதைவிட அதிர்ச்சியானது, தங்கம் கடத்திய வழக்கில் திஹார் சிறையில் இரு ஆண்டுகள் இருந்தவர்கூட துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான். இவையெல்லாம் ஆளுநர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு முந்தைய அரசாங்கங்கள் செய்த சம்பவங்கள் ஆகும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் சரி. பொது வாழ்வில் நீண்ட அனுபவம்மிக்க தமிழக முதல்வர், எந்த நெருக்கடிக்கும் ஆளாகாமல் துணைவேந்தர்களை நியமிக்கும் விஷயத்தில் தகுதியான, நேர்மையான, ஊழல் கறைபடியாத, திறமையானவர்களையே நியமிக்க வேண்டும். அதுதான் தமிழகத்தில் உயர்கல்வி சிறப்பிடம் பெறுவதற்குப் பெரும் துணையாக அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.