இந்திய ராணுவத்தில், அக்னிவீர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்திய ராணுவத்தில், அக்னிவீர் பொதுப் பணி, அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் எழுத்தர் மற்றும் ஸ்டோர்கீப்பர் தொழில்நுட்பம், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (10-ம் வகுப்பு தேர்ச்சி), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (8-ம் வகுப்பு தேர்ச்சி), சிப்பாய் நிலையிலான தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், சிப்பாய் நிலையிலான பார்மா, அக்னிவீர் பொதுப் பணி (ராணுவ மகளிர் காவல்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தில் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், புதுவை யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்டம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் அக்னிவீர் பணியிடத்துக்கு தங்கள் தகுதியின் அடிப்படையில் ஒரே நேரத்தில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுத் தகுதித்தேர்வு ஆன்லைன் முறையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் என்சிசி தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இதில் போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவு கடந்த 12-ம் தேதியன்று தொடங்கி வரும் ஏப்ரல் 10-ம் தேதியன்று முடிவடையும். வரும் ஜூன் மாதம் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும். இதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும். அவற்றைப்பெற விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட இணையதளத்தையும், அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலையும் தொடர்ந்து பார்த்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தை (தலைமையகம்) நேரிலோ அல்லது 044-25674924 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.