பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்: பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் சந்திரபாபு கோரிக்கை

0
56

டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் பொறுப்பேற்றார். அதன் பிறகு முதல்முறையாக டெல்லி சென்றுள்ள அவர், நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ராம்மோகன் நாயுடு, நிவாச வர்மா ஆகியோரை சந்தித்தார்.

பிரதமர் மோடியை சந்தித்த சந்திரபாபு நாயுடு, மாநில அரசியல் நிலவரம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

பின்னர், ஜெகன் ஆட்சியில் ஆந்திர மாநிலத்தின் கஜானா காலியாகி விட்டதால் கடும் நிதிநெருக்கடி நிலவுவதாக தெரிவித்தார். நிதி நெருக்கடியை சமாளிக்க, இம்மாத இறுதியில் தாக்கல்செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், ஆந்திர மாநிலத்துக்கு கூடுதல்நிதி ஒதுக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.

குறிப்பாக, மாநில பிரிவினை மசோதாவில் கூறியுள்ளபடி கூடுதல் நிதியையும், அமராவதி மற்றும்போலவரம் அணைக்கு தேவையான நிதியையும் ஒதுக்கும்படி அவர் கேட்டுகொண்டுள்ளார்.

மேலும், முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளின் சீரமைப்பு பணிகள்,கிராமிய மற்றும் நகர்ப்புறத்தில் வசிக்கும் ஏழைகளுக்கான வீடுகட்டும் திட்டம், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்துமாறும் பிரதமர் மோடியிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமருடன் ரேவந்த் சந்திப்பு: தெலங்கானா மாநில முதல்வர்ரேவந்த் ரெட்டியும் டெல்லியில் முகாமிட்டுள்ளார். மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசிவரும் அவர், தங்கள் மாநிலத்துக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.