வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுகவினர் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்: இபிஎஸ் அறிவுறுத்தல்

0
87

வாக்கு எண்ணிக்கையின்போது, அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களவைப் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, ஜூன் 4-ம்தேதி நடைபெறுகிறது. இதற்காகஅதிமுக, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ம் தேதி, முகவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக, தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கிய அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குச் சென்றுவிட வேண்டும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வரை எக்காரணம் கொண்டும் மையங்களில் இருந்து வெளியில் வரக்கூடாது. மிகுந்த கவனத்துடன் வாக்கு எண்ணிக்கையை உற்றுநோக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும். பதிவான வாக்குகள், படிவம் 17சி-யில் உள்ள வாக்குகளை சரிபார்க்க வேண்டும்.

ஒவ்வொரு சுற்று முடிவிலும் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, குறித்து வைத்த வாக்குகள் சரியாகஅறிவிக்கப்படுகிறதா என்பதை கவனமாகப் பார்க்க வேண்டும். மாறுதல் இருந்தால் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். சந்தேகங்கள் இருந்தால் அதைதலைமை முகவரிடம் தெரிவித்து, எழுத்துப்பூர்வமாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்து ஒப்புகைபெற்றபின், அடுத்தச் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

திமுகவினர் வதந்தி பரப்புவதிலும், வன்முறை செய்வதிலும் கைதேர்ந்தவர்கள் என்பதால், மிகுந்த விழிப்போடு கண்காணித்து முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், மேலதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.

அதிமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள், அனைத்து சுற்று முடிவும் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அங்கிருந்து வெளியேற வேண்டும். மேலும், வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here