எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குறித்து அவதூறு கார்ட்டூன்: திமுக ஐ.டி. பிரிவு மீது அதிமுக தரப்பு புகார்

0
82

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குறித்து அவதூறு கார்ட்டூன் வெளியிட்ட விவகாரத்தில் திமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

கீழடி அகழாய்வு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமியை மையப்படுத்தி அவரது கார்ட்டூன் சமூக வலைதளத்தில் அண்மையில் வைரலானது. இந்த கார்ட்டூனை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு (ஐடி விங்) தயார் செய்து பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக ஐடி விங் மீது அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சத்யன் என்ற கோவை சத்யன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், “3 தினங்களுக்கு முன்பு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் எக்ஸ் சமூக வலைதளத்தில் கீழடி விவகாரத்தில் பழனிசாமி நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கேலிச் சித்திரம் வரைந்து வெளியிட்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட திமுகவின் ஐடி விங் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அதனை பகிர்ந்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுமட்டும் அல்லாமல் அதிமுக வழக்கறிஞர் அணி, மாவட்ட செயலாளர்கள் சார்பிலும் தனித்தனியாக மொத்தம் 5 புகார் மனுக்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டன. புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிமுக தலைமையிடம் பேசி அடுத்த நடவடிக்கை பற்றி அறிவிக்கப்படும் என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here