சொத்து குவிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், ஓபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணையை மார்ச் 25, 26-ம் தேதிகளுக்கு தள்ளி வைத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2001-06 அதிமுக ஆட்சி காலத்தில் வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று, இந்த வழக்கில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார். இந்த வழக்கில்இறுதி விசாரணை நேற்று தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
அதை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கின் இறுதி விசாரணையை மார்ச் 25, 26-ம் தேதிகளுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.