அதானி முந்த்ரா துறைமுகம் வந்த மிகப்பெரிய சரக்கு கப்பல்

0
35

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் 400 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட சரக்கு கப்பல் நங்கூரமிட்டு உள்ளது. இது இந்தியாவுக்கு வந்த மிகப்பெரிய சரக்கு கப்பல் ஆகும்.

நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களில் மும்பை ஜேஎன்பிடி துறைமுகம் முதலிடத்தில் உள்ளது. குஜராத்தின் கட்ச் மாவட்டம், முந்த்ராவில் உள்ள துறைமுகம் 2-வதுஇடத்தில் இருக்கிறது. இந்த தனியார் துறைமுகத்தை அதானி குழுமம் நிர்வகித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் எம்வி எம்எஸ்சி ஹம்பர்க் என்ற சரக்கு கப்பல் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்தது. இதன் நீளம் 399 மீட்டர் ஆகும். இதுதான் இந்தியாவுக்கு வந்த மிகப்பெரிய சரக்கு கப்பலாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக முந்த்ரா துறைமுகத்தில் எம்எஸ்சி அனா என்ற சரக்கு கப்பல் நங்கூரமிட்டு நிற்கிறது. இதன் நீளம் 400 மீட்டர் ஆகும். இந்த சரக்கு கப்பலின் பரப்பளவு 4 கால்பந்து மைதானங்களுக்கு இணையானது.

இதுகுறித்து முந்த்ரா துறைமுக வட்டாரங்கள் கூறியதாவது: குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் 35,000 ஏக்கர் பரப்பளவு கொண்டது ஆகும்.இந்த துறைமுகத்தில் கச்சா எண்ணெய், நிலக்கரி, இரும்பு, உரங்கள் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் இறக்குமதிசெய்யப்படுகின்றன. இங்கிருந்து கனிமங்கள், மருந்து பொருட்கள், வேதியியல் பொருட்கள், இயந்திர தளவாடங்கள், கார்கள் உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தற்போது உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எம்எஸ்சி அனா, முந்த்ரா துறைமுகத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் இத்தகைய பெரிய கப்பல் களை இங்கு மட்டுமே நிறுத்த முடியும்.

நமது நாட்டில் மும்பை ஜேஎன்பிடி துறைமுகம், மிகப்பெரிய துறைமுகமாக விளங்குகிறது. ஆனால் அந்த துறைமுகத்தின் கடல் ஆழம் குறைவாக இருப்பதால்மிகப்பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்தமுடியாது. எனவே இந்திய பெருங்கடல் வழியாக வரும் மிகப்பெரிய சரக்கு கப்பல்கள், சிங்கப்பூர் அல்லது இலங்கையில் மட்டுமே நிறுத்தப்படுகின்றன. தற்போது முந்த்ரா துறைமுகத்தில் மிகப்பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்தி புதிய சாதனை படைத்து வருகிறோம்.

கடந்த 26-ம் தேதி முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த எம்எஸ்சி அனா சரக்கு கப்பலில் இருந்து மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதே கப்பலில் ஏராளமான பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இவ்வாறு முந்த்ரா துறைமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here