ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருதி இந்த தொடரில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ அறிவித்தது. இதுதொடர்பாக ஐசிசி-க்கு தகவல் தெரிவித்த பிசிசிஐ, இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தது.
ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்தது. இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் உட்பட முழு தொடரையும் பாகிஸ்தானிலேயே நடத்துவதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் உறுதியாக உள்ளது. இதனால் போட்டியின் அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஐசிசி தரப்பில் நேற்று அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி, நேரில் கலந்து கொண்டார். மேலும் ஐசிசி முழு நேர உறுப்பினர்களான 12 நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஐசிசி தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஆன்லைன் வழியாக பங்கேற்றார்.
கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை மீண்டும் தெளிவுப்படுத்தியது. 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் இன்றும் (30-ம் தேதி) கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.