தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் கடிக்கும் நிகழ்வு தொடர் கதை ஆகிவிட்டது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் நாய்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன. திருவள்ளூரில் இருந்து காக்களூர் வழியாக இருசக்கர வாகனத்தில், நடந்து செல்பவர்கள் நாய்கள் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் சாலையை கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் காக்களூர் ஊராட்சி குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்க்கு வெறி பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் நபர்கள் அனைவரையும் கடித்துள்ளது.
அந்த பகுதியில் சென்ற 3 பெண்கள், 15 ஆண்கள் என 18 பேரை அந்த நாய் கடித்துள்ளது. திருவள்ளூர் நகராட்சி துப்புரவு பணியாளர் சரசு (47), காக்களூர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன்(65) சுரேஷ்(42) ரவிக்குமார்(26) பாஸ்கர்(47) லோகநாதன் (60) உட்பட 18 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நாயை பிடிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரே நாளில் 18 பேரை நாய் கடித்துள்ள சம்பவம் காக்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.















