தீபாவளிக்காக 3.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில்

0
23

தீபாவளி பண்டிகைக்கு பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப, மெட்ரோ ரயில்கள் அதிகபட்சமாக 3.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் தேவைக்கு ஏற்ப, மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுகின்றன. அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி, தேவைக்கு ஏற்ப கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில், பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2.50 லட்சமாக இருந்த தினசரி பயணிகள் எண்ணிக்கை தற்போது 2.80 லட்சம் முதல் 3 லட்சமாக உயர்ந்துள்ளது. தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில், மற்ற நாட்களைவிட பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது, 2 வழித்தடங்களில் 6 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதிகபட்சமாக 3.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மெட்ரோ ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விதி மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here