அறிவியல் இயக்கத்தின் முன்னோடி வள்ளிநாயகம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் இரங்கல்

0
20

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னோடி வள்ளிநாயகம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் அ.வள்ளிநாயகம் (78) நேற்று சென்னையில் காலமானார்.

அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வள்ளிநாயகத்தின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், அறிவியல் இயக்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சுதாகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று (நவ.30) காலை அஸ்தினாபுரத்தில் தகனம் செய்யப்படுகிறது.

அவரது மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட இரங்கல் செய்தி: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அ.வள்ளிநாயகம். இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர்.

அதைத் தொடர்ந்து துளிர் இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து கடந்த 25 ஆண்டுகளாக நடந்துவரும் துளிர் திறனறிதல் தேர்வை தொடங்கியவர். எழுத்தாளர், ஆய்வாளர், மொழி பெயர்ப்பாளர், களப்பணியாளர் என பன்முகத் தன்மை கொண்ட வள்ளிநாயகத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here