பிஹார் மாநிலத்தில் ஓடும் ரயிலில் செல்போன் திருடமுயன்ற நபரின் கைகளை ஜன்னல் வழியாக பயணிகள் பிடித்துக் கொண்டதால், ரயிலுக்கு வெளியே மரண பீதியுடன் தொங்கிய நிலையில் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
பிஹார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சிவ்நாராயண்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று இரு தினங்களுக்கு முன்பு புறப்பட்டது. அப்போது, ஜன்னல் வழியாகப் பயணி ஒருவரின் செல்போனை மர்ம நபர் ஒருவர் பறிக்க முயன்றார். இதையடுத்து, ரயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் விரைந்து செயல்பட்டு, மர்ம நபர் தப்பிச் செல்வதற்கு முன்பாக அவரது கைகளைப் பிடித்துக் கொண்டனர். ரயில் நகரத் தொடங்கியபோதும் அவரை விடாமல் பிடித்திருந்ததால், அந்த நபர் ஓடும் ரயிலுக்கு வெளியே தொங்கிய நிலையில் இருந்தார்.
உயிர் பிழைத்தார்
ரயில் வேகம் எடுக்கத் தொடங்கியதும், அந்த நபர் தன்னை விடுவித்துக் கொள்ள மரண பீதியுடன் போராடினார். ரயில் நிலையத்தில் இருந்தவர்களும் இந்தக் காட்சியைப் பார்த்து பதறி துடித்தனர். சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அந்த நபர், பின்னர் நடைமேடையில் விழுந்தார்.
சிறிய காயங்களுடன் அவர் உயிர் பிழைத்தார். இதையடுத்து, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். ரயில் நிலையங்களில் செல்போன் திருட்டு முயற்சிகளால் பயணிகள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை சுட்டிக்காட்டும் வகையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
இதற்கிடையே, சந்தேகத்துக்குரிய திருடர்களைப் பிடிக்க முயற்சிக்கும்போது, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதைப் பயணிகள் தவிர்க்க வேண்டும். திருட்டு முயற்சி நடந்தால், ரயில்வே ஊழியர்கள் அல்லது ரயில்வே காவல் துறை (ஜிஆர்பி), ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) ஆகியோரிடம் புகார் அளிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.














