தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராஃப்ட் ‘சாண்ட்பேப்பர்’ மூலம் பந்தை சேதப்படுத்தியது கேமராவில் பதிவானது. இந்த விவகாரத்தில் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பேன்கிராஃப்ட் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா எழுதிய புத்தகத்தில், 2018-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் அணியில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என கூறியிருந்தார். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் மீண்டும் புயலை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேன்கிராஃப்ட் இணையதளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
கடந்த 8 ஆண்டுகளாக இந்த விவகாரத்தின் முழுப் பொறுப்பையும் நானே சுமந்தேன். எனது சக்திக்கு மீறிய மிகப்பெரிய சுமையாக அது இருந்தது. அனைவருக்காகவும் நானே பழியை ஏற்றுக்கொண்டேன். அது எனது சொந்த முடிவாகும். ஆனால், 2018-ம் ஆண்டில் முழு உண்மையும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்த விவகாரம் ஒட்டுமொத்த அணிக்கும் தெரியும்.
அப்போது பந்தை சேதப்படுத்தும் பணியைச் செய்ய முடியுமா என்று என்னிடம் கேட்கப்பட்டது. அது தவறு என்பது எனக்குத் தெரியும். ஒட்டுமொத்த அணியின் நலனுக்காகவும், போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் நாங்கள் அனைவரும் இணைந்தே இதைச் செய்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.














