தீவிரம் அடையும் ‘அக்வான்’ புயல்: நவ.19-ல் சென்னை, திருவள்ளூருக்கு கனமழை எச்சரிக்கை

0
17

அக்வான் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், நாளை மறுநாள் (நவ.19) சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள அக்வான் புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் மெதுவாக வடக்கு – வட மேற்கு திறையில் நகர்ந்து வருகிறது.

இது சென்னைக்கு கிழக்கே சுமார் 610 கி.மீ. தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலைக்கு வடகிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், ஆந்திரப் பிரதேசத்தின் மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 660 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்தின் தென்கிழக்கே 670 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இது வடக்கு வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. நவ.19-ம் தேதி காலை இது கடுமையான புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, 20-ம் தேதி நண்பகலில் ஆந்திராவின் நெல்லூருக்கும் துனிக்கும் இடையே இந்த புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ. முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அவ்வப்போது 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசவும் வாய்ப்புள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

நவ.18 (புதன்கிழமை) அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழகம், ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நவ.19 (வியாழக்கிழமை) அன்று சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நவ.20 (வெள்ளிக்கிழமை) அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகம் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here