தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு: காங்கிரஸ் அறிவிப்பு

0
12

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த டெல்லி சலோ போராட்டத்தைக் காங்கிரஸ் கட்சி ஒத்திவைத்துள்ளது. அதற்குப் பதிலாக, அரசியலமைப்பு தினமான நவம்பர் 26-ஆம் தேதி அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் ‘அரசியலமைப்பு பாதுகாப்புப் பேரணி’ நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாக்குகளைக் காப்போம், தேசத்தைக் காப்போம்’இயக்கத்தின் நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த ‘டெல்லி சலோ’ போராட்டம் வேறொரு தேதியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டெல்லி உட்பட அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் பிரம்மாண்டமான பேரணிகளை நடத்துமாறு அனைத்து மாநிலக் காங்கிரஸ் கமிட்டிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 1-ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இண்டியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்ற பேரணியில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டத்தை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் நோக்கில் ‘வாக்குப் பாதுகாவலர்’ என்ற புதிய முன்னெடுப்பைக் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்தபட்சம் ஒரு பயிற்சி பெற்ற வாக்குப் பாதுகாவலரை மண்டலத் தலைவர்கள் நவம்பர் 21-ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். இவர்கள் நவம்பர் 22 முதல் 30-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்து விவரங்களைச் சரிபார்த்து, அதற்கென உருவாக்கப்பட்டுள்ள www.iamvoterakshak.in என்ற இணையதளத்தில் தினசரி பதிவேற்றம் செய்ய உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 29 முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை கிராம மற்றும் மண்டல அளவில் மக்கள் சபைகள் நடத்தப்பட உள்ளன. இதில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர்களும் இதில் நேரில் கலந்துகொண்டு, வாக்குரிமைப் பாதுகாப்பை வலியுறுத்த உள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here