டெல்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது மகளுக்கு கொலை மிரட்டல் மற்றும் ரூ.7 கோடி பணம் கேட்டு பிஷ்னோய் கும்பல் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜர்னைல் சிங், மொகாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: நவ. 6-ம் தேதி எனது செல்போனுக்கு ஒரு நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பும், வாட்ஸ்அப் குறுஞ்செய்தியும் வந்தது. அந்த நபர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என தெரிவித்தார்.
அந்த நபர், அர்விந்த் கேஜ்ரிவாலிடம் ரூ.7 கோடி கொடுக்கச் சொல்லுங்கள். இல்லையெனில், அவரையும், அவரது மகள் ஹர்ஷிதா கேஜ்ரிவாலையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான எனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, கேஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான பணம் பறிக்கும் முயற்சியையும் கொலை மிரட்டலையும் அந்த நபர் மேற்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு அவரைக் கைது செய்ய வேண்டும். மேலும், மிரட்டலுக்கு உள்ளான நபர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














