‘அர்னாப்’ புயல் கரையைக் கடந்து வலுவிழந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம்

0
23

மிக தீவிர புயலான ‘அர்னாப்’, ஆந்திரப் பிரதேசத்தின் நர்சாபூர் மற்றும் புதுச்சேரியின் ஏனம் இடையே உள்ள கடற்கரைப் பகுதியில் இன்று கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், தற்போது தீவிர புயலாக வலுவிழந்துள்ள இது இன்னும் ஒன்று முதல் மூன்று மணி நேரத்துக்குள் முழுமையாக கடக்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘அர்னாப்’ புயல் மிக தீவிர புயல் என்ற நிலையில் இருந்து தீவிர புயலாக வலுவிழந்துள்ளது. இது இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணிக்குள் நர்சாபூருக்கு கிழக்கு – வடகிழக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும், ஏனத்துக்கு தென்மேற்கே 40 கி.மீ. தொலைவிலும் காக்கிநாடாவுக்கு தென்மேற்கே 60 கி.மீ. தொலைவிலும் கடற்கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடந்தபோது காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வேரை இருந்தது. அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 150 கி.மீ. வரை அதிகரித்தது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், “இந்த புயலால் இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. நிர்வாகம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம்.” என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

புயல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசாகப்பட்டினம் வானிலை ஆய்வு மைய இயக்குநர் மூர்த்தி, “புயல் மணிக்கு சுமார் 3 கி.மீ. வேகத்தில் மிக மெதுவாக நகர்ந்து வருகிறது. அதன் மையம் ஏற்கனவே கடற்கரையை கடந்துவிட்டது. தற்போது காற்றின் வேகம் மணிக்கு 125 கி.மீ. முதல் 135 கி.மீ. வரை உள்ளது. அவ்வப்போது காற்று மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் வீசுகிறது.

புயல் கடற்கரையைக் கடக்கும் நிகழ்வு மதியம் 2 மணிக்குள் புயல் முழுமையாக நிறைவடையும். புயல் கரையை முழுமையாக கடந்த பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறையும். இன்று மாலை வரை பலத்த மழை தொடரும். அதன் பிறகு மழையின் தீவிரமும் காற்றின் வேகமும் படிப்படியாகக் குறையும். நிலப்பகுதியை கடந்த பிறகு இந்த பயல் வடக்கு – வட மேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஏனம் காவல் கண்காணிப்பாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புயலால் ஏற்படக்கூடிய அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க திங்கள் கிழமை முதலே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி நேற்று முதல் நாங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நேற்று இரவு பலத்த மழையும் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசியது. இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நாங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். ஏனம் வருவாய்த் துறை சார்பில் 19 தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

கிராமப்புறங்களில் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் புதுச்சேரி மாநில பேரிடர் மீட்புப் படை உதவியுடன் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட உள்ளோம். அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.” என தெரிவித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here