திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று சக்கரஸ்நான நிகழ்வுடன் நிறைவடைந்தது. கடந்த 8 நாளில் ரூ.25.79 கோடி உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த அக்.12-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 9 நாட்கள் வரை நடைபெற்ற இவ்விழா, நேற்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவுற்றது. நிறைவு நாளான நேற்று காலையில் உற்சவ மூர்த்திகளுடன் சக்கரத் தாழ்வாரும் கோயிலில் இருந்து பல்லக்கில் ஊர்வலமாக கோயில் அருகே உள்ள சுவாமி புஷ்கரத்திற்கு (குளம்) கொண்டுவரப்பட்டனர்.
அங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து புனித தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அங்கு காத்திருந்த திரளான பக்தர்கள் குளத்தில் மூழ்கி ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டவாறு புனித நீராடினர். இந்நிகழ்வுடன் நவராத்திரி பிரம்மோற்சவமும் நிறைவடைந்தது.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு, நிர்வாக அதிகாரி எம். ரவிசந்திரா மற்றும் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு பிரம்மோற்சவத்தை விட இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு சற்று குறைவான பக்தர்களே வருகை புரிந்தனர். இதற்கு தொடர் மழையும், சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவல்களுமே காரணம். இம்முறை மின்விளக்கு அலங்காரங்கள் மிக சிறப்பாக இருந்தன. கடந்த 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 8 நாட்களில் மட்டும் 6.26 லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசித்துள்ளனர்.
இதில் 2.44 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 22.60 லட்சம் பேருக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. 34.34 லட்சம் லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.25.79 கோடி உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.














