ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து நிதி பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளார்: அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில் அரசு தரப்பில் குற்றச்சாட்டு

0
27

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி உள்ளிட்ட அனுமதி பெற்றுத் தருவதாகக்கூறி ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், திமுக பிரமுகரும், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவருமான பி.டி.அரசகுமார், சங்கப் பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், ‘‘இந்த வழக்கில் 8 மணி நேரம் மனுதாரரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரிடம் இதுதொடர்பாக 240 கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

அதற்கு மனுதாரரும் பதிலளித்துள்ளார். தற்போது 10 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதையேற்று 7 ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அன்பில் மகேஸ் முன்னாள் அமைச்சர். அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார். ஏற்கெனவே இந்த வழக்கில் கைதான 3 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே அன்பில் மகேஸுக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்றார்.

அதற்கு போலீஸார் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான்சத்யன், ‘‘இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் இன்னும் தலைமறைவாகவுள்ளார். இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று தான் நினைத்திருந்தோம்.

ஆனால் கட்சி நிதி எனக்கூறி ரூ.400 கோடிக்குமேல் வசூலித்து நிதி பயங்கரவாதத் தில் ஈடுபட்டுள்ளனர். மனுதாரர் அந்த துறையின் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். தலைமறைவாகவுள்ள முத்துக்குமாரும், அன்பில் மகேஸும் ஒன்றாக படித்த நண்பர்கள்.

இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை நடந்து வருவதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது’’ என ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்பில் மகேஸுக்கு முன்ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here