தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி சென்னையில் இண்டியா கூட்டணி தலைவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்ஐஆர் மூலம் நாடு முழுவதும் 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் எனக்கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், “நம் அனைவருக்கும் ஒரே கொள்கை, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்; எஸ்ஐஆர்-ஐ திரும்பப்பெற வைக்க வேண்டும் என்பது தான்.
அதற்கு முதல் படியாக ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். நமது இலக்கை அடையும் வரை போராட்டம் தொடரும்” என்றார். தவெக சார்பில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, “எஸ்ஐஆர் மூலம் ஏழை, எளிய மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஜனநாயகத்துக்கு எதிரான செயலை நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, “எஸ்ஐஆர் மூலம் மிகப்பெரிய வாக்கு திருட்டு நடந்துள்ளது. மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகிய கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் திட்டமிட்டு கடந்த தேர்தலில் வீழ்த்தப்பட்டுள்ளனர் ” என்றார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், ஐயுஎம்எல் மாநில பொதுச்செயலாளர் அபூபக்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.














