பஞ்சாப்பின் மான்சாவைச் சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர் அஸ்வனி குமார் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சமூக ஆர்வலரான பர்விந்தர் சிங்கை அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
இச்சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ராஜஸ்தான் மாநிலம் சலாசரில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். அதன்பின் அவருடைய வீடு புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்பட்டது. ஏற்கெனவே, அவரது உறவினர் விபின் கைது செய்யப்பட்டுள்ளார். அஸ்வனி குமார் மட்டுமின்றி, இதில் தொடர்புடைய அனைவரும் கைதாக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
நீதி கிடைக்கும் வரையிலும், முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரையிலும் பர்விந்தர் சிங்கின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப் போவதில்லை என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். மேலும், இந்தக் கொலையைக் கண்டித்து இன்று (15-ம் தேதி) பஞ்சாப் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்த அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.














