பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியதாகக் கூறப்படும் 41 பேரை தங்கள் படைகள் கொன்றுவிட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள நூரிஸ்தான் மாகாணத்தின் கம்தேஷ் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்களாக ஊடுருவ முயன்றவர்களை தடுத்தபோது மோதல் ஏற்பட்டது.
இதில், 41 பேரை எங்கள் படைகள் கொன்றன. மேலும், 62 பேர் கைது செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) அமைப்பைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருந்தனர்.
நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்க எந்தவொரு தரப்பினரையும் அனுமதிக்க மாட்டோம். மீண்டும் இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டால் இன்னும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் ஆதரவுடன் அவர்கள் ஊடுருவியதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து, பாகிஸ்தான் தரப்பில் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எல்லைப் பகுதியில் ஊடுருவல்காரர்களின் நடமாட்டம் தொடர்பான நீண்டகால பிரச்சினைகளால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த ஆண்டில் இதுவரை எல்லை தாண்டிய வன்முறைகளால் ஆப்கானிஸ்தானில் 1,100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக, ஐ.நா. ஆப்கானிஸ்தான் உதவித் திட்டம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.













