உ.பி.யின் ஒரே மாவட்டத்தில் 2 முக்கியப் பதவிகளில் தமிழ் அதிகாரிகள்!

0
23

உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்துக்கு இரண்டு முக்கியப் பதவிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளில் உள்ள தமிழர்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பது காரணம் எனலாம்.

உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள ஏட்டாவில் தமிழரான எம்.அருள்மொழி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 2017-ம் ஆண்டு ஐஏஎஸ் ஆக தேர்ச்சி பெற்றவர். ஆக்ரா வளர்ச்சி ஆணையகத்தின் துணைத் தலைவராக இருந்தவர், இப்போது ஏட்டாவின் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இங்கு ஏற்கெனவே, மாவட்ட எஸ்எஸ்பியாக தமிழரான மருத்துவர்.இளமாறன் ஐபிஎஸ் பணியாற்றுகிறார்.

இதன்மூலம், உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்தில் முக்கிய இரண்டு நிர்வாகப் பணிகளிலும் தமிழர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன் பின்னணியில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக உள்ள தமிழர்கள் முக்கியத்துவம் பெற்று வருவது காரணம். இம்மாநிலத்தில் சுமார் 15 ஐஏஎஸ் மற்றும் 10 ஐபிஎஸ் அதிகாரிகளாக தமிழர்கள் உள்ளனர். அவர்களின் மீதான நம்பிக்கையில் பெரும்பாலனவர்களுக்கு உ.பி.யில் எந்த ஆட்சி அமைந்தாலும் முக்கியப் பதவிகள் கிடைத்து வருகிறது.

இதுபோல், ஒரே மாவட்டத்தின் முக்கியப் பதவிகளில் தமிழர்களான அதிகாரிகள் பலரும் இருந்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன் ஜான்சி மாவட்ட ஆட்சியராக தேவராஜ் மற்றும் எஸ்எஸ்பியாக ஆண்டணி தேவகுமார் இருந்தனர். பிறகு, இதே ஜான்சியில் எஸ்எஸ்பியாக எழிலரசன், கூடுதல் எஸ்பியாக பி.தினேஷ்குமார் மற்றும் உதவி எஸ்பியாக எஸ்.ராஜேஷ் ஒரே சமயத்தில் பணியாற்றினர்.

காஸ்கஞ் மாவட்டத்தில் ஆட்சியராக செல்வகுமாரி மற்றும் எஸ்எஸ்பியாக டாக்டர்.என்.கொளஞ்சி என்பவரும் பணியமர்த்தப்பட்டனர். பிறகு கொளஞ்சியின் காஸ்கஞ் உள்ளடக்கிய அலிகரின் டிஐஜியான பிரகாஷ்.டி பணியாற்றினார். தற்போது, உ.பி ரயில்வேயின் ஏடிஜியாக பிரகாஷ்.டி மற்றும் அவரது ஐஜியாக பிரயாக்ராஜில் டாக்டர்.என்.கொளஞ்சியும் பணி செய்கின்றனர். இதனிடையே, டிஐஜியாக எஸ்.ராஜேஷ் ‘உள்ள பாந்தா’ மாவட்டத்தின் ஆட்சியராக ஜெ.ரீபா பணியாற்றினார்.

அதேபோல், வாரணாசியில் காவல் துறை கூடுதல் ஆணையராக எழிலரசன், துணை ஆணயராக டி.சரவணன் மற்றும் மாவட்ட ஆட்சியராக எஸ்.ராஜலிங்கம் பணியில் இருந்தனர். தற்போது ராஜலிங்கம் பதவி உயர்வுபெற்று அதே மாவட்டத்தில் மண்டல ஆணையராக உள்ளார்.

குறிப்பாக, பாஜக முதல்வரான யோகி ஆதித்யநாத், தமிழர் அதிகாரிகளை தனது ஆட்சியின் முக்கியப் பணிகளில் அமர்த்தி பயன்படுத்தி வருகிறார். இவரது முதன்மை செயலாளரான எம்.தேவராஜ் மற்றும் உள்துறையின் இயக்குநராக அண்ணாவி தினேஷ்குமார் உள்ளனர்.

முக்கிய நகரமான கான்பூரின் மண்டல ஆணையராக இருக்கும் கே.விஜயேந்திரபாண்டியனுக்கு, சிறு, குறு மத்திய தொழில் துறையின் செயலாளர் உள்ளிட்ட சில பதவிகள் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here