இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 130 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கியப்பட்டுள்ளது.
பர்மிங்காமில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 33.5 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சவுத் ஷகீல் 43 ரன்கள் எடுத்தார். இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 453 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
320 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது. அஸான் அவாய்ஸ் 29, ஷான் மசூத் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி தொடர்ந்து விளையாடியது. அஸான் அவாய்ஸ் 59 ரன்கள் எடுத்த நிலையில் லாரன்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 125 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அஸம், ஷான் மசூத்துடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயற்சித்தார். ஷான் மசூத் 148 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 95 ரன்களும், பாபர் அஸம் 103 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 76 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது. 67 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்திருந்தது.
21 வயதான ரஸாவுல்லா, 63 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். அவர் 9 சிக்ஸர்களை விளாசி இருந்தார். இது சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு முதல் டெஸ்ட் போட்டியாக அமைந்தது. முகமது அப்பாஸ் 42 ரன்கள் எடுத்தார்.
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 96.4 ஓவர்களில் 449 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் இங்கிலாந்தில் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது பாகிஸ்தான். முதல் இடத்தில் 542 ரன்கள் உடன் இங்கிலாந்து உள்ளது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 397 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்த ஆட்டம் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணியால் ஒரே நாளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது பாகிஸ்தான். கடந்த 2005-ல் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே நாளில் 407 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி.
பாகிஸ்தான் அணிக்கு இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் பேட்டிங்கில் அந்த அணியின் திறனை வெளிக்காட்டும் வகையில் அமைந்தது. இந்த இன்னிங்ஸிற்கு முன்பு பாகிஸ்தான் அணி விளையாடிய 5 இன்னிங்ஸில் 200 ரன்களை கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.














