நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 40 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு

0
17

வடமேற்கு நைஜீரியாவின் சோகோடோ மாநிலத்தில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வியாழக்கிழமை காலையில், கரையோரமுள்ள வயல்வெளிகளில் நெல் நடும் பணிக்காக 70-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களும், சிறுவர்-சிறுமிகளும் ஒரே படகில் பயணித்துள்ளனர். நதியின் நடுவே சென்று கொண்டிருந்தபோது, சுமை தாங்காமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்தது.

தகவலறிந்ததும் அப்பகுதி நீச்சல் வீரர்களும், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து அதிகாரிகளும் மீட்புப் பணியில் இறங்கினர். இதுவரை 40 குழந்தைகளின் உடல்கள் உட்பட 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திலேயே 46 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், போதிய பாதுகாப்பு உடைகள் இல்லாததும், பழமையான படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதுமே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாயமான மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நைஜீரியாவில் மோசமான சாலை வசதிகள் காரணமாக மக்கள் நீர்வழிப் பயணங்களையே அதிகம் நம்பியுள்ளனர். இதனால் இதுபோன்ற விபத்துகள் அங்கு தொடர்கதையாகி வருகின்றன. ஏற்கனவே 2025 ஆகஸ்ட் மாதத்தில் சோகோடோ பகுதியில் நடைபெற்ற படகு விபத்தில் 25 பேர் மாயமாகி உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெரும் சோகம் அப்பகுதியில் நிகழ்ந்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here