10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் வெள்ளி வென்று சாதனை; பளுதூக்குதலில் ஹர்ஜிந்தர் கவுர் அசத்தல்

0
17

கிளாஸ்கோ 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான பளுதூக்குதலில் 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் 227 கிலோ எடையை (ஸ்னாட்ச் 101 + கிளீன் அன்ட் ஜெர்க் 126) தூக்கி புதிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கனடாவைச் சேர்ந்த சார்லோட் சிமோனோ 240 கிலோ எடையை (ஸ்னாட்ச் 108 + கிளீன் அன்ட் ஜெர்க் 132) தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 77 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சஞ்சனா தனது முதல் 3 முற்சியிலும் 94 கிலோ எடையை தூக்கத் தவறினார். ஸ்னாட்ச் பிரிவில் அவர், எடையை தூக்க முடியாததால் 19 வயதாகும் சஞ்சனா போட்டியிலிருந்து விலக்கப்பட்டார். இதனால், அவருக்கு மிகவும் வலிமையான கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.

குல்வீர் சிங்

ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரரான குல்வீர் சிங் பந்தய தூரத்தை 27:49.78 வினாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டின் ஒட்டப்பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற சாதனையை அவர், படைத்தார்.

ஆஸ்திரேலியாவின் கை ராபின்சன் 27:48.93 வினாடிகள் இலக்கை எட்டி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஐல் ஆஃப் மேன் தீவுகளின் வீரர் டேவிட் முல்லார்கி (27:50.28) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மகளிருக்கான உயரம் தாண்டுதலில் ஆசிய சாம்பியனான இந்தியாவின் பூஜா சிங் 1.82 மீட்டர் உயரத்தை 3 முறை முயற்சி செய்தும் தாண்ட முடியாமல் வெளியேறினார்.

அனிமேஷ் குஜூர்

ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் ஹீட்ஸ் 4-ல் இந்தியாவின் அனிமேஷ் குஜூர் பந்தய தூரத்தை 20.46 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறினார்.

குண்டு எறிதல்

ஆடவருக்கான குண்டு எறிதல் தகுதி சுற்றில் குரூப் ‘ஏ’-வில் இடம் பெற்றிருந்த இந்திய வீரரான தஜிந்தர் பால் சிங் தூர் தனது 2-வது முயற்சியில் 20.14 மீட்டர் தூரம் எறிந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீரரான சமர்தீர்ப் சிங் கில் ‘பி’ பிரிவில் தனது முதல் முயற்சியில் 19.95 மீட்டர் தூரமும், 2-வது முயற்சியில் 19.75 மீட்டர் தூரமும் வீசினார். 3-வது முயற்சியில் ஃபவுல் செய்தார். ஒட்டுமொத்தமாக 15-வது இடம் பிடித்து சமர்தீர்ப் சிங் கில் இறுதி சுற்றில் நுழைந்தார்.

நீச்சல்

நீச்சலில் ஆடவருக்கான 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் பந்தய தூரத்தை 1.51.99 விநாடிகளில் கடந்து ஒட்டுமொத்தமாக 20-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே இறுதி சுற்றில் நுழைய முடியும்.

பாரா நீச்சல் போட்டியில் இந்தியாவின் சைதன்யா விஷ்வாஸ் குல்கர்னி, சுயாஷ் நாராயன் ஜாதவ் ஆகியோர் எஸ்7 ஃப்ரீஸ்டைல் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here