மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலத்த அமளி மற்றும் கூச்சலுக்கு இடையே, பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்தச் சட்ட மசோதா 2026, குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்ட மசோதா தொடர்பாக மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது: “இந்தியக் கல்வி முறையை ஆர்எஸ்எஸ் சீரழித்து வருகிறது. மத்தியக் கல்வி அமைச்சகத்தை அந்த துறையின் அமைச்சர் இயக்கவில்லை. ஆர்எஸ்எஸ் தான் இயக்குகிறது. மாணவர்கள் உண்மையையும் அறிவையும் தேடுவதை ஆர்எஸ்எஸ் தடுப்பதோடு,தங்களின் கற்பனையான வரலாற்றுப் பதிவுகளைப் படிக்குமாறு கட்டாயப்படுத்துகிறது.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு முகமூடி மட்டுமே; மாணவர்களின் உண்மையான எதிரி ஆர்எஸ்எஸ் தான். கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற மாணவர்கள் போராட்டத் தின் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு அமித் ஷாவே காரணம். நாடாளுமன்றத்துக்கு வந்து மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்துப் பேச உள்துறை அமைச்சருக்குத் தைரியமில்லை.” இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
இதுகுறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசும்போது, “மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித் ஷா தான் உத்தரவிட்டார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது ? எவ்வித ஆதாரமும் இன்றி எதிர்க்கட்சித் தலைவர் இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தக்கூடாது. அவர் தன் வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதனால் அவையில் மீண்டும் அமளி ஏற்பட்டது. ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் கடும் விவாதங்களுக்கு மத்தியில் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் அமளி: நீட் மசோதா தொடர்பாக நேற்று மாநிலங்களவையிலும் அமளி நிலவியது. காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சிபிஐ(எம்) எம்பி ஜான் பிரிட்டாஸ் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, “காவல் துறையின் நடவடிக்கை சாதாரண சட்டம்-ஒழுங்கு பராமரிப்பின் ஒரு பகுதியே. போராடும் மாணவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை சந்தித்து தான் ஆக வேண்டும்” என்று நியாயப்படுத்தினார்.
தேசியப் பாடல் அவமதிப்பு மசோதா: தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா 2026 பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்திற்காக மாநிலங்களவையில் நேற்று கொண்டுவரப்பட்டது. தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல் அவமதிப்பைக் குற்றவியல் நடவடிக்கையாக மாற்றும் சட்ட மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
நீட் வினாத்தாள் கசிவு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறை நடத்திய தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த விவாதத்தின்போது ஏற்பட்ட கடும் அமளியைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பிற்கு மத்தியிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.















