ஷமியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் நிறைவுற்றதா? – ஒரு விரைவுப் பார்வை

0
31

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் பவுலரான முகமது ஷமியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் நிறைவுற்றதா?’ என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.

அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் முகமது ஷமி இடம்பெறவில்லை.

35 வயதான அவர், கடந்த 2013 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 64 டெஸ்ட், 108 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடி, மொத்தமாக 462 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். கடைசியாக கடந்த 2025-ல் மார்ச் மாதம் விளையாடி இருந்தார். அதன் பின்னர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

இருப்பினும் மனம் தளராத அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ரஞ்சி டிராபி சீசனில் 7 ஆட்டங்களில் விளையாடி 37 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நீண்ட ஸ்பெல்களை வீசினார். ஆனாலும், தேர்வுக்குழு அவரை அணிக்குள் மீண்டும் அழைக்காமல் உள்ளது.

ஷமிக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

30-களின் பிற்பாதியில் உள்ள ஷமியை அணியில் தேர்வு செய்யும் யோசனை இல்லை என தகவல் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்க பிசிசிஐ ஆர்வம் காட்டுவதாக தகவல். அதற்காக சுமார் 15 வீரர்களை தேர்வு செய்து வைத்துள்ளதாக தெரிகிறது.

அமைதியாக ஓரங்கட்டப்படுகிறார்

இதற்கு முன்பு புஜாரா, ரஹானே, சாஹா உள்ளிட்ட வீரர்கள் போல அணியில் வாய்ப்பு பெறாமல் ஓரங்கட்டப்பட்டனர். இப்போது அந்த வரிசையில் ஷமி இருப்பதாக தெரிகிறது.

இந்திய அணியில் இப்போது சீனியர் வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, சிராஜ் ஆகியோர் உள்ளனர். இதில் பும்ரா அனைத்து ஆட்டங்களிலும் ஆடுவது சந்தேகம். அவரது பணிச்சுமையை அணி நிர்வாகம் கருத்தில் கொள்கிறது.

அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் மாற்றத்தில் உள்ளது. ஷமிக்கு வாய்ப்பு மறுப்பது மற்றொரு இளம் வீரருக்கான வாய்ப்பாக அமையும் என தேர்வுக்குழு கருதலாம். அதன் பலன் என்ன என்பது அடுத்த ஆண்டு தெரியவரும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here