சென்னை ஐஐடி நலவாழ்வு மையத்துக்கு, சர்வதேச தரச்சான்று கிடைத்திருப்பதாக, ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி தெரிவித்தார்.
மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து, சென்னை ஐஐடியில் தென்னிந்திய பேராசிரியர்களுக்கு மனநல வாழ்வு தொடர்பான 2 நாள் பயிலரங்கம் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி திட்டத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிலரங்கில், தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதன் தொடக்க விழாவில், மத்திய கல்வி அமைச்சக இணைச் செயலர் ரீனா சோனோவால் கவுலி பேசும்போது, ‘‘மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி திட்டத்தின் கீழ், பேராசிரியர்களுக்கான இந்த பயிலரங்கம் நடத்தப்படுகிறது.
இதுவரை நடத்தப்பட்ட பயிலரங்குகள் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பயன்பெற்றுள்ளனர்’’ என்றார்.
முதல் நிறுவனம்
ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி பேசும்போது, ‘‘தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மைக்கான ஐஎஸ்ஓ தரச்சான்று 45001:2018 ஐஐடி நலவாழ்வு மையத்துக்கு கிடைத்துள்ளது. இச்சான்றை டியுவி நார்ட் குழுமம் வழங்கியது.
மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் நலவாழ்வு மையத்துக்காக சர்வதேச தரச்சான்று பெற்ற முதல் நிறுவனம் சென்னை ஐஐடி’’ என்றார்.
ஐஐடி டீன் (மாணவர் நலன்) சத்யநாராயணா கும்மாடி, ‘மாணவர் ஆதரவு மாற்றத்துக்கான பயணம் – சென்னை ஐஐடி நலவாழ்வு மாதிரி’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.















