பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவு விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு

0
18

 திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் ‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் தனி​யார் நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது.

கடந்த 21-ம் தேதி காலை சுமார் 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது, அமோனியா வாயுக் கசிவு ஏற்​பட்​டது. இதில், பணி​யில் இருந்த தொழிலா​ளர்​கள் 83 பேர் மயக்​கம் அடைந்​தனர். பலருக்கு கண் எரிச்​சல், மூச்​சுத் திணறல் பாதிப்​பு​கள் ஏற்​பட்​டது.

பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உடனடி​யாக மீட்​கப்​பட்​டு, மஞ்​சங்​காரணை வேல்ஸ் மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை, சிறுணி​யம் வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை மற்​றும் ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இதில் 9 பேர் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், சென்​னை, ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஷுபாஷி ஜுங்​கா(24) நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

வேல்ஸ் மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை ஆகிய​வற்​றில் 5 பேர் சிகிச்சை பெற்​று, தங்​குமிடத்​துக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளனர்.

மற்ற 68 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில், தீவிர சிகிச்சை பிரி​வில் சிகிச்சை பெற்று வரும் 20-க்​கும் மேற்​பட்​ட​வர்​களில் பலரின் நிலை கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

உயி​ரிழந்​தவர்​களில் பிரேத பரிசோதனை செய்​யப்​பட்ட 5 பேரின் உடல்​கள் நேற்று முன் தினம் விமானம் மூலம் ஒடிசா மாநிலத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது.

ஆதார் மோசடி

கன்​னிகைப்​பேர் அமோனியா வாயுக் கசிவு விபத்​தில் உயிர்​இழந்​தவர்​கள் பட்​டியலில் ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த பூர்​ணிமா ஜுங்கா என்ற இளம்​பெண்​ணின் பெயரும் இடம்​பெற்​றுள்​ளது. ஆகவே, அப்​பெண்​ணின் ஆதார் அட்டை விபரங்​கள் குறித்​து, அரசு அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

அதில், பூர்​ணிமா ஜுங்கா ஆந்​திர மாநிலத்​தில் உயிருடன் இருப்​பதும், அமோனியா வாயுக் கசிவு ஏற்​பட்ட தனி​யார் நிறு​வனத்​தில் பதிவு செய்​யப்​பட்​டுள்ள ஆதார் அட்டை அவருடையது இல்லை என்​பதும் தெரிய வந்​துள்​ளது.

இதுதொடர்​பாக, தமிழகம் மற்​றும் ஒடிசா மாநில அதி​காரி​கள் நடத்​திய தொடர் விசா​ரணை​யில், பல தொழிலா​ளர்​கள் ஒரே ஆதார் அட்​டையை பயன்​படுத்​தி​யும்​,பிறருக்கு சொந்​த​மான ஆதார் அட்​டைகளை பயன்​படுத்​தி​யும் வேலை பெற்​றுள்​ளதும், கன்​னிகைப்​பேர் தனி​யார் நிறு​வனத்​தில் முன்பு மேற்​பார்​வை​யாள​ராக பணி​யாற்​றிய ஸ்ரீகாந்த் ஜுங்கா ஒடிசா தொழிலா​ளர்​களை பணிக்கு அழைத்து வந்​துள்​ளதும் தெரிய வந்​துள்​ளது.

ஆகவே, விபத்து நடந்த தனி​யார் நிறு​வனத்​தில் பணி​யில் இருந்த தொழிலா​ளர்​களின் விவரங்​கள் மற்​றும் அவர்​களின் ஆதார அட்டை விவரங்​கள் உள்​ளிட்​ட​வையை அதி​காரி​கள் சேகரித்து வரு​கின்​றனர்.

தனி​யார் தொழிற்​சாலை​யில் உள்ள இறால் உள்​ளிட்ட கடல் உணவு​களை அப்​புறப்​படுத்​தும் பணி​களை நேற்று திரு​வள்​ளூர் ஆட்​சி​யர் கவிதா ஆய்வு செய்​தார்.

செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர் அமோனியா வாயுக் கசிவு விபத்​தில் இரு சிறுமிகள் உயி​ரிழந்​தன​ரா? என்​பது தொடர்​பாக ஆதார் அடிப்​படை​யில் விசா​ரணை நடத்​தப்​படும் என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here