‘கூட்டணி கட்சிகள் மீது பழி சுமத்தி, விமர்சித்துக் கொண்டே இருந்தால் திமுக இனி எப்போதுமே ஆட்சிக்கு வரமுடியாத நிலை ஏற்படும்’ என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் செ.ராஜேஷ் குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள தவெக தலைவர் விஜய் முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் தீர்ப்பு.
மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் தவெகவுக்கு ஆதரவளிப்பது காங்கிரஸின் கடமை. இதற்காக காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை ‘முரசொலி’ நாளிதழ் மூலம் திமுகவினர் எல்லைமீறி வசைபாடி வருகின்றனர்.
திமுக தயவால் காங்கிரஸ் வென்றது எவ்வளவு உண்மையோ, அதேபோல 1967, 1971, 1996, 2006, 2021 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் தயவில்தான் திமுகவும் ஆட்சி அமைத்தது. ஒரு தேர்தலில்கூட தனித்து வெல்ல முடியாத திமுக, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் ஒருபோதும் பங்கு தந்ததில்லை.
ஆனால், தவெக தலைவர் விஜய், தங்களுக்கு உதவிய காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளித்து உண்மையான கூட்டாட்சியை நிலைநிறுத்தியுள்ளார்.
அதிமுக தலைமையில் ஆட்சி அமைக்க பாஜக தீட்டிய சதி திட்டத்தை, மதச்சார்பற்ற சக்திகளோடு இணைந்து காங்கிரஸ் முறியடித்தது. திமுகவினரின் வரம்பு மீறிய விமர்சனங்கள் தொடர்ந்தால், அதே வழியில்பதிலடி கொடுக்க காங்கிரஸுக்கும் தெரியும்.
எனவே, கூட்டணி கட்சிகளை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, தோல்விக்கான உண்மையான காரணங்களை திமுக கண்டறிய வேண்டும். மக்கள் தீர்ப்பை ஏற்று சிறந்த எதிர்க்கட்சியாக திமுக செயல்பட வேண்டும், இல்லையெனில் ஒரு போதும் ஆட்சிக்கு வரமுடியாது; எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக் காது என்று கூறியுள்ளனர்.















