“சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டனர். அதனால் தவெக அரசுக்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை” – மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் இந்தக் கருத்தால் திமுக முகாம் தகித்துக் கொண்டிருக்கிறது.
தனது வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யை வைகோ வரவேற்று வழியனுப்பிய உற்சாகத்தைப் பார்த்ததுமே இவர் இனி நம் பக்கம் தங்கமாட்டார் என்ற முடிவுக்கு வந்துவிட்ட திமுக, அதற்காக கவலைப்படவும் இல்லை. ஆனால், துரை வைகோ இப்போது உதிர்த்திருக்கும் ‘துரதிருஷ்டவசமாக’ என்ற வார்த்தை அறிவாலயத்து மக்களை துடிக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய திமுக-வின் மூத்த முன்னாள் அமைச்சர் ஒருவர் “எங்களுடைய தலைவர் தோற்றாலும் மதிமுக-வினரை உதயசூரியனில் நிற்கவைத்து துரதிருஷ்டவசமாக ஜெயிக்க வைத்துவிட்டோமே என நாங்கள் தான் இப்போது மறுகிக் கொண்டிருக்கிறோம். 2024 மக்களவைத் தேர்தலில் திருநாவுக்கரசருக்காக திருச்சி தொகுதியை பிடிவாதமாகக் கேட்டது காங்கிரஸ்.
அப்போது, மும்பை இண்டியா கூட்டணி கூட்டத்தில் இருந்த ராகுலிடம் நேரடியாகவே பேசி திருச்சியை மதிமுக-வுக்காக பெற்றுக் கொடுத்தவர் எங்கள் தலைவர் ஸ்டாலின். அப்போதே, ‘உயிரே போனாலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவேன்’ என்று சொன்னார் வைகோவின் மகன் துரை.
அதை மனதில் வைத்துக் கொண்டு திமுக-வினர் சுணங்கிவிடக் கூடாதே என கவலைப்பட்ட ஸ்டாலின், ‘துரையை ஜெயிக்க வெச்சுட்டுத்தான் நீங்க சென்னைக்கு வரணும்’ என கே.என்.நேருவிடம் சொன்னார். அதற்குத்தான் இப்போது தனது விசுவாசத்தைக் காட்டி இருக்கிறார் அந்தத் தம்பி. துரதிருஷ்டவசமாக சூரியனில் நின்றதால் 2 இடத்திலாவது ஜெயித்தார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்கள் விரும்பிய சின்னத்தில் நின்றிருந்தால் அட்ரஸே இல்லாமல் போயிருப்பார்கள்.
அப்பாவுக்கும் பிள்ளைக்கும் என்றைக்குமே திமுக-வை பிடிக்காது… அதிலும் குறிப்பாக, ஸ்டாலினைப் பிடிக்கவே பிடிக்காது என்பது எங்களுக்கும் தெரியாமல் இல்லை. மக்கள் நலக் கூட்டணியை எடுத்து மூடிய பிறகு, ‘போக்கிடமில்லாமல் நிற்கிறோம்’ என்று தான் திமுக-விடம் வந்தார் வைகோ. ‘எந்த நிபந்தனையும் இல்லாமல் வருகிறோம். எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஸ்டாலினிடம் சொன்னவர், ‘உங்கக்கிட்டயே வந்துட்டேன்பா; என்னை ஏத்துக்கோங்க’ என்று அப்போது பேராசிரியரிடம் சொன்னதையும் இப்போது மறந்திருக்கலாம்.
மல்லை சத்யா, திருப்பூர் துரைசாமி, புலவர் செவந்தியப்பன் உள்ளிட்ட மதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள் 16 பேர் திமுக-வில் இணைய முன்வந்தபோது, ‘அண்ணன் வைகோ வருத்தப்படுவார்’ என்று சொல்லி அதை தவிர்த்தவர் ஸ்டாலின். திமுக ஆட்சியில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு எந்த நல்லதுமே நடக்கவில்லை என்று வைகோவால் நெஞ்சில் கைவைத்துச் சொல்லமுடியுமா? ‘ஸ்டாலினுக்கு இறுதிவரை பக்கபலமாக இருப்பேன்’ என கருணாநிதிக்கு வைகோ கொடுத்த சத்தியவாக்கு இப்போது என்னாயிற்று? அதை மறந்துவிட்டதால் தான், ‘மதிமுக எம்எல்ஏ-வான கம்பம் ராமகிருஷ்ணனை திமுக-வில் சேர்த்தபோது குதிரை பேரம் நடக்கவில்லையா?’ என்று கேட்கிறாரா?
இவர்களுக்கு என்றைக்குமே அதிர்ஷ்டக் காற்று இருந்ததில்லை. இவர்களை அதிர்ஷ்டக்காரர்கள் ஆக்கியதே திமுக தான். 30 ஆண்டுகள் 3 மாதங்கள் எம்.பி-யாக இருந்திருக்கிறார் வைகோ. இதில் 29 ஆண்டுகள் அவர் திமுக எம்.பி-யாகத்தான் இருந்திருக்கிறார். இப்போது அவரது மகனும் திமுக தயவில் தான் எம்.பி-யாக இருக்கிறார். அப்படி எல்லாம் தங்களை அங்கீகரித்த கட்சிக்கே இவர்கள் விசுவாசமாக இல்லாதபோது வேறு யாருக்கு விசுவாசமாக இருக்கப் போகிறார்கள்?
பொதுக்குழு என்ற பெயரில், அப்பாவும் பிள்ளையும் எழுதி வைத்திருக்கும் முடிவை நிர்வாகிகள் நெற்றியில் ஒட்டப் போகிறார்கள். அதற்காக, ஆங்காங்கே மிஞ்சி இருக்கும் மதிமுக-வினரை அவர்கள் இப்போதே பேட்டிகள் மூலம் தயார்படுத்தி வருகிறார்கள்.
தானாக நடப்பதை எல்லாம் தன்னால் நடந்ததாகச் சொல்லிக் கொள்ளும் வைகோ, திமுக-வின் வெற்றியில் தனக்கும் பங்கிருப்பதாக ஏதோ சிருஷ்டி கர்த்தா போல் இப்போது சொல்கிறார். மதிமுக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக திமுக எவ்வளவெல்லாம் ‘கொடுத்தது’ என்பதையும் அவர் ‘எண்ணிப்’ பார்க்க வேண்டும். அரசியலில் யாரும் இங்கே தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தவில்லை; கட்சிகள் தான் நடத்துகிறார்கள். எனவே, அவரவருக்கும் அரிதான வாய்ப்புகள் வரும்போது அதைப் பயன்படுத்தவே நினைப்பார்கள்.
அந்த வகையில், விஜய் தனது வீட்டுக்கு வந்த போது, தானே விஜய்யை முதல்வராக்கியது போல் அவரை வரவேற்று அகமகிழ்ந் வைகோ, தனக்குத் தேவையானதைப் பெற்றுக் கொண்டு தாராளமாக தவெக அரசுக்கு ஆதரவளிக்கட்டும்; யாரும் அதை கேள்வி கேட்கப் போவதில்லை. அதை விடுத்து, திமுக-வினரின் உழைப்பை உதாசீனப்படுத்த வேண்டாம் என்பதுதான் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் நாங்கள் கொடுக்கும் அட்வைஸ்” என்றார்.
வைகோ தங்களுக்கு குட்பை சொல்கிறார் என்பதைவிட, திமுகவை ‘தீயசக்தி’ என்று தூற்றிக் கொண்டிருக்கும் விஜய்யின் பக்கம் சாய்கிறாரே என்பது தான் திமுக-வினரை ரொம்பவே தகிக்க வைத்திருக்கிறது.















