நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு குழந்தை பிறந்திருக்கும் நிலையில், அவரது இல்லத்துக்கு, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து வந்து வழங்கினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு, முதலாவதாக ஆண் குழந்தை இருக்கும் நிலையில், அவர்களுக்கு இரண்டாவதாக, பெண் குழந்தை கடந்த 22-ம் தேதி பிறந்தது. இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு நாதஸ்வரம், மேள தாளங்கள் முழங்க, திரளான பெண்கள் கூட்டத்துடன் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊர்வலமாக நேற்று வருகை தந்தார். அவருடன் வந்திருந்த பெண்கள் பழத்தட்டுகளுடன் சீர்வரிசையை எடுத்து வந்திருந்தனர்.
தன் வீட்டுக்கு சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்த அனிதா ராதாகிருஷ்ணனை, சீமான் வீட்டுக்கு வெளியில் வந்து நின்று முகமலர்ச்சியுடன் வரவேற்றார். அப்போது, மரியாதை நிமித்தமாக சீமானுக்கு, பட்டு வஸ்திரத்தை அனிதா ராதாகிருஷ்ணன் அணிவித்தார். தொடர்ந்து அவரது கையை பிடித்து சீமான், தனது வீட்டுக்குள்ளே அழைத்து சென்றார்.
அங்கே, குழந்தையுடன் இருந்த கயல்விழியை நலம் விசாரித்து, பின்னர் குழந்தைக்கு தங்க நகை பரிசளித்தார். அனிதா ராதாகிருஷ்ணன், சீமான் – கயல்விழி குடும்பத்தினருக்கு நீண்ட காலமாக நல்ல நட்புடன் இருந்து வருகிறார். இந்நிலையில், தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் சூழலில், மாமன் சீராக, பிறந்த குழந்தைக்கு சீர்வரிசை பொருட்களை அவர் எடுத்து வந்ததாக நாதகவினர் தெரிவித்தனர்.















