பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இத்தாலி தலைநகர் ரோமுக்கு சென்றார். இதையொட்டி பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளிலும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க வழிவகுக்கிறது.
இரு நாடுகள் இடையே பாதுகாப்பு மற்றும் விண்வெளி, தூய்மையான தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள், ரசாயனங்கள், மருந்துகள், ஜவுளி, உணவுதானியங்கள், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும். வரும் 2029-ம் ஆண்டுக்குள் இத்தாலி, இந்தியா இடையே 20 பில்லியன் யூரோ அளவுக்கு வர்த்தக இலக்கை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
‘‘இத்தாலியில் தயாரிக்கப்பட்டது’’ என்பது உலகளவில் ஓர் அடையாளமாக விளங்கி வருகிறது. இப்போது, ‘‘இந்தியாவில் உற்பத்தி செய்தல்’’ என்ற முன்முயற்சியில் இணைகிறோம். இந்தியாவின் உற்பத்தி துறையில் இத்தாலிய வணிகங்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதேபோல இத்தாலி உற்பத்தித் துறையில் 1000-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் கால்பதித்துள்ளன. இவை எங்களது விநியோகச் சங்கிலிகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நேர்மறையான அறிகுறியாகும்.
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (ஐஎம்இசி) மூலம் நவீன போக்குவரத்து, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் வலையமைப்புகள், எரிசக்தி கட்டமைப்புகள் மேம்படும். ஐஎம்இசி என்ற தொலைநோக்கு திட்டத்தை நனவாக்க இந்தியாவும், இத்தாலியும் இதர ஐரோப்பிய நாடுகளும் இணைந்து கூட்டாக செயல்படும். எங்கள் நாடுகளுக்கு இடையேயான ஆழமான கூட்டாண்மை மற்றும் நீடித்த கலாச்சாரப் பிணைப்புகளைப் பயன்படுத்தி, எங்கள் பொதுவான சவால்களை எங்களால் எதிர்கொள்ள முடியும். இந்தியக் கலாச்சாரத்தில், ‘தர்மம்’ எனும் கருத்துரு, எங்கள் செயல்களுக்கு வழிகாட்டுகிறது.
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட டிஜிட்டல் யுகத்தில், ‘உலகம் ஒரு குடும்பம்—என்ற இந்தியாவின் கொள்கை வலிமையாக எதிரொலிக்கிறது. இத்தகைய மாண்புகள், மறுமலர்ச்சிக் காலத்தில் வேரூன்றிய இத்தாலியின் மனிதநேயப் பாரம்பரியத்தில் இயல்பாகவே பிரதிபலிக்கின்றன. அது ஒவ்வொரு தனிநபரின் மாண்பையும், மக்களையும், சமூகங்களையும் ஒன்றிணைக்கும் கலாச்சாரத்தின் ஆற்றலையும் எடுத்துக்காட்டுகிறது.
எனவே, எங்கள் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை, மக்களை மையமாகக் கொண்டு, ஒரு வலிமையான மற்றும் முற்போக்கான இந்திய-இத்தாலி கூட்டாண்மைக்கு அடித்தளம் அமைப்போம். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.















