தோல்விக்கான காரணம், தற்போதைய அரசியல் சூழல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை இழந்துள்ள நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து கள ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் திமுகவில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஸ்டாலின் விவாதித்ததாக தெரிகிறது.
இளைஞரணி கூட்டம்
இதனிடையே, திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திமுக இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
துணைச் செயலாளர்கள் முன்னிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இக்கூட்டத்தில் ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்தநாள், திமுக இளைஞர் அணி பணிகள் குறித்து விவாதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.















