ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் சேர்த்தனர்.
169 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஹைதராபாத் அணியானது குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 14.5 ஓவர்களில் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பாட் கம்மின்ஸ் 19, சலில் அரோரா 16, ஹென்ரிச் கிளாசன் 14, இஷான் கிஷன் 11 ரன்கள் சேர்த்தனர். டிராவிஸ் ஹெட் 0, அபிஷேக் சர்மா 6 ரன்களில் நடையை கட்டினர். குஜராத் அணி தரப்பில் காகிசோ ரபாடா, ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 3 விகெட்களை வீழ்த்தினர்.
பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்களையும் முகமது சிராஜ், ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். குஜராத் அணிக்கு இது 8-வது வெற்றியாக அமைந்தது. 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 16 புள்ளிகளை குவித்து முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இது 5-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 12 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்விகளுடன் 14 புள்ளிகள் சேர்த்து 3-வது இடத்தில் உள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி கூறியதாவது: குஜராத் டைட்டன்ஸ் அணியினர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பந்துவீச்சில் அவர்கள் எங்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்தனர். அதேவேளையில் பேட்டிங்கின் போது அவர்களுடைய தொடக்க வீரர்கள் சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆட்டத்தின் பாதியில் நாங்கள் திருப்தியாகவே இருந்தோம், எனினும் அவர்களுடைய பந்துவீச்சு வரிசையை எதிர்கொள்வது கடினம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.
4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் ரஷித் கானும் இணையும்போது, அது எப்போதுமே சவாலான ஒன்றாகத்தான் இருக்கும். பேட்டிங்கில் நாங்கள் எதிர்பார்த்த சிறப்பான தொடக்கம் எங்களுக்கு அமையவில்லை, அதை அவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். அவர்களுடைய பந்துவீச்சும் அபாரமாக இருந்தது. குஜராத் டைட்டன்ஸ் பலமான அணி, அவர்களுக்கென்று ஒரு தனித்துவமான பாணி உள்ளது. தேவைப்படும்போது அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறமை அவர்களிடம் உள்ளது. அந்த வகையில், ஆடுகளத்தின் சூழலை அவர்கள் மிகச்சிறப்பாகக் கையாண்டார்கள்.
இந்தச் சூழலுக்கு அவர்கள் மிகவும் பொருத்தமானவர்கள். எங்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய பந்துவீச்சு வரிசையை எதிர்கொள்வதுதான் முக்கிய சவாலாக இருந்தது. இலக்கு 169 ரன்கள் என்றபோது எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாகவே நாங்கள் கருதினோம். இதற்காக நான் பேட்டிங் வரிசையை எந்தவிதத்திலும் குறை சொல்ல மாட்டேன், இந்த சீசனில் அவர்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடரில் உள்ள ஒவ்வொரு அணிக்கும் அவ்வப்போது சில சிறிய பின்னடைவுகள் ஏற்படத்தான் செய்யும். எங்களுக்கு அது தற்போது நிகழ்ந்துள்ளது.
இதிலிருந்து மீண்டு வந்து எங்களால் மீண்டும் பலமாகத் திரும்ப முடியாது என்பதற்கு எந்தக் காரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எங்களுடைய பந்துவீச்சாளர்கள் எப்போதுமே குறையே இல்லாமல் செயல்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஐபிஎல் தொடரில் தற்போது நிலவும் சூழலில் பந்துவீசுவது என்பது மிகவும் கடினமான காரியம். குஜராத் டைட்டன்ஸ் அணியை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது ஒரு மிகச்சிறந்த பணியாகும். இவ்வாறு டேனியல் வெட்டோரி கூறினார்.















