“கோஹினூர் வைரத்தை திரும்பத் தருமாறு மன்னர் சார்லஸை வலியுறுத்துவேன்” – நியூயார்க் மேயர் மம்தானி

0
113

வரலாற்று சிறப்பு மிக்க கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் வழங்குமாறு பிரிட்டன் மன்னர் சார்லஸிடம் வலியுறுத்த உள்ளதாக நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கூறியுள்ளார்.

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு அந்நாட்டு அதிபர் டொனல்டு ட்ரம்ப்பை அவர்கள் சந்தித்தனர். வெள்ளை மாளிகையில் அவர்களுக்கு அமெரிக்கா அரசு முறை வரவேற்பை அளித்தது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கூறியதாவது: “மன்னர் சார்லஸ் உடன் தனித்து பேசும் வாய்ப்பு கிடைத்தால், கோஹினூர் வைரத்தை திரும்ப தருமாறு வலியுறுத்துவேன்” என்றார். அவரது இந்த கருத்து அமெரிக்க அரசியலில் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. மேயர் மம்தானி இது போல தெரிவித்திருக்க கூடாது என நியூயார்க் நகர அரசியலில் அனுபவம் கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேயர் மம்தானி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் கடந்த 2001-ல் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா தம்பதியர் அஞ்சலி செலுத்தினர். அப்போது மன்னர் சார்லஸை மம்தானி சந்தித்தார். இருப்பினும் அந்த சந்திப்பில் அவர்கள் பேசியது என்ன என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

கோஹினூர் வைரம்: ஆந்திர மாநில சுரங்கத்தில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய வைரம் வெட்டியெடுக்கப்பட்டது. அதற்கு கோஹினூர் என்று பெயர் வைத்தனர். தற்போது உலகிலேயே மிகப்பெரிய வைரமாக (105 கேரட்) கோஹினூர் உள்ளது. அதன் மதிப்பு 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. கோஹினூர் வைரம் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது. இது 14 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போதைய தெலங்காவின் வாரங்கலில் உள்ள ஒரு இந்து கோவிலில் தெய்வத்தின் ஒரு கண்ணாக பயன்படுத்தப்பட்டது. மாலிக் கஃபூர் (அலாவுதீன் கில்ஜியின் ஜெனரல்) அதை கொள்ளையடித்தார் என்றும், அதன்பின் முகலாயப் பேரரசின் பல ஆட்சியாளர்களுக்கு அனுப்பப்பட்ட பிறகு, சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங் லாகூரில் அதை வைத்திருந்தார். மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகன் திலீப் சிங் ஆட்சியின் போது 1849-ல் விக்டோரியா மகாராணிக்கு வைரம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here